திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர கோயிலில் தெப்போற்சவ திருவிழா! - temple function
மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில். இது காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து 3 பொறிகள் முக்குளங்களாக மாறியதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோரமுர்த்தியாக தனி சன்னதி கொண்டு விளங்குகிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை ராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராமாயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார்.
இந்த கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலிலிருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்குச் சிறப்புத் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 5 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.