கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - theni news today
Published : Sep 20, 2023, 11:20 AM IST
தேனி:கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக் கானல், வெள்ள கெவி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (செப். 19) பிற்பகல் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இதனால் நேற்று மாலை முதல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் யாரும் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் நாளை (செப். 21) அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அதுவரையில் அருவியல் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் என தேவதானப்பட்டி வணச்சரகர் டேவிட்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வன உயிரியியல் சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி, தேவதானப்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு தேனி மாவட்ட சார்ந்த மக்கள் மட்டும் மல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.