சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை.. பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் விரக்தி...
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (மே 19) இரவு பலத்த சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் பெரியகுளம் அருகே உள்ள முருகமலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் மா, தேக்கு, இலவம் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தது.
இதில், நேரு நகர் பகுதியில் கொய்யா சாகுபடி நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், தற்பொழுது பூ மற்றும் பிஞ்சுகளுடன் மரங்கள் இருந்தது. இந்நிலையில், நேற்று அடித்த பலத்த சூறாவளி காற்றால் கொய்யா மரத்தில் இருந்த பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து சேதம் அடைந்தது. மேலும், விலை உயர்ந்த தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து, முறிந்து விழுந்ததால், அவற்றை அகற்ற வேண்டும் என்றால் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அவற்றுக்கான உரிய உத்தரவுகளை பிறப்பித்தால் மட்டுமே அகற்ற முடியும்.
இந்த நிலையில் விவசாயிகள் பாதிப்பு குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நேரில் வந்து பார்வையிட வரவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இயற்கை சீற்றத்தினால் பாதிப்படைந்து உள்ள விவசாயிகளின் பாதிப்பு குறித்து வருவாய்த் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!