தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழா கோலாகல துவக்கம்! - தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா
பொதுமக்களிடம் புத்தக வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் அரசு சார்பில் மாவட்டம் வாரியாக புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் முதன் முதலாக புத்தக திருவிழா மார்ச் 3ஆம் தேதி துவங்கியது. மயிலாட்டம் ஒயிலாட்டம் என தமிழரின் பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தக திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு புத்தக திருவிழாவினை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். தேனி பழனி செட்டிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில் 50 க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை கவரக் கூடிய புத்தகங்கள் அதிக அளவில் இந்த புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் புத்தகத் திருவிழா அறிமுக விழாவில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகத்தை வாங்குவதற்காக 100 ரூபாய் காண இலவச கூப்பன் வழங்கப்பட்டது. அதனைக் கொண்டு மாணவிகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் மாணவிகள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கும் பள்ளி மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த புத்தகத் திருவிழா மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தகத் திருவிழாவிற்கு பொதுமக்களை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிங்க: அரசு வேலை மோசடி: முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது!