நிரம்பி வழியும் புல்லூர் தடுப்பணை! விவசாயிகள் மகிழ்ச்சி!
Published : Sep 25, 2023, 11:37 AM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆந்திர எல்லை பகுதிகளான இரட்டை பாலாறு, பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை தாண்டி தமிழக எல்லையில் உள்ள புல்லூர் வழியாக பாலாற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.
இந்த நீர் ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, ராம நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி பாலாற்றின் வழியாக வாணியம்பாடி நோக்கி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வாணியம்பாடி பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் பாலாற்றின் துணை ஆறுகளான மலட்டாறு மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் பாலாறு 33 கிலோ மீட்டர் ஓடும் நிலையில் அம்மாநில அரசு பாலாற்றின் குறுக்கே இதுவரை 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியுள்ளது. இந்நிலையின் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி 250 கன அடி நீர் தற்போது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.