Fishing festival:கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - ஏமாற்றத்துடன் வீடுதிரும்பிய மக்கள்! - கெண்டை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள ராஜாக்கபட்டியில் 45 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் உள்ளது. இந்த குளம் 15 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு பெய்த மழையால் குளம் முழுமையாக நிரம்பியது. 1 1/2 வருடம் தண்ணீர் இருந்த நிலையில் தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
இதற்காக நத்தம், செங்குறிச்சி, சிலுவத்தூர், செந்துறை, பண்ணப்பட்டி, ராஜாக்கபட்டி மற்றும் வெளி மாவட்டங்களான புதுக்கோட்டை, மேலூர், சிங்கம்புணரி என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி ஊத்த கூடை கொண்டு ஒற்றுமையாக இறங்கி குளத்தில் மீன்களைப் பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்டப் பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும் என்று ஆவலாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிராம மக்கள் மீன் பிடிக்க வந்திருந்துள்ளனர். ஆனால், போதிய மீன்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குச் சென்றனர்.