Coimbatore - சரளபதி பகுதியில் பட்டப்பகலில் உலாவரும் மக்னா யானை பீதியில் பொதுமக்கள்! - Saralapathi area
பொள்ளாச்சி: தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில், மக்னா காட்டு யானை சுற்றித்திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த யானையைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது.
இந்நிலையில் இந்த மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. மேலும், பொள்ளாச்சி வனச் சரகத்திற்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆனைமலை அருகே உள்ள சரளபதி பகுதியில், மக்னா யானை தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து, விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தியதுடன் மக்கள் வாழ்விடங்களுக்குள், புகுந்து உலா வருவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பீதியில் உள்ளனர்.
மேலும், வாகனங்கள் கடக்கும் சாலைகளிலும் பகல் நேரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சரளபதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் பொதுமக்களை அச்சுறுத்தும் மக்னா யானையைப் பிடித்து, கும்கி யானையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொது சிவில் சட்டம்; அதிமுகவின் நிலைப்பாடு; 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன?