கோயில் மேற்கூரையில் பற்றிய திடீர் தீ - விஷமிகள் காரணமா என போலீஸ் விசாரணை!
திருச்சி: மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டியில் அமைந்துள்ளது மலையாண்டி கோயில். பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளியூர்களில் இருந்து பொது மக்கள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென இந்த கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
கோயிலின் மேற்கூரையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
அதற்குள் கோயிலின் மேற்கூரை முழுவதும் சற்று நேரத்திற்குள்ளாகவே முற்றிலும் எரிந்து சாம்பலானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அருகிலுள்ள வனப் பகுதிக்குள் பரவி விடாமல் தடுத்தனர். அதனை தொடர்ந்து தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புத்தாநத்தம் காவல் துறையினர், இது வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்டதா? இல்லை வேறு யாரும் செய்த தவறா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பத்து நாட்களுக்கும் முன் தான் இந்த கோயிலின் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை கிராமங்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொது மக்கள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் தற்போது கோயிலின் மேற்கூரை தீப்பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.