கோயிலுக்கு சாமி கும்பிட வந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்; தப்பி ஓடியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு - போலீஸ் வலைவீச்சு
திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் இன்று தனது குடும்பத்தினருடன் கொடையாஞ்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள பாலாற்றில் கஜேந்திரனின் குடும்பத்தினர் குளித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் கஜேந்திரனின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் வாக்குவாதம் முற்றிபோகவே அந்நபர்கள் கஜேந்திரன் மற்றும் அவரது மகன் பிரேம், மகள் அபிதாவை பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் கஜேந்திரனுக்கு தலையிலும், பிரேமிற்கு கைகளிலும், அபிதாவிற்கு முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் மீட்ட பொதுமக்கள் அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் இந்நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்து கஜேந்திரனின் குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.