திருவண்ணாமலை மகா ரதத் தேரோட்டத்திற்கு கலசம் பொருத்தும் பணிகள் நிறைவு!
Published : Nov 21, 2023, 9:54 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்குவது அண்ணாமலையார் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடந்து காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகளின் மாடவீதி உலா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கியத் திருவிழாவான விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோரின் பஞ்ச மூர்த்தி மகா ரதத் தேரோட்டம் வருகின்ற 23ஆம் தேதி 7ஆம் திருவிழாவில் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தில் தேர்களின் மீது தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை பொருத்தும் பணிகள் இன்று நடைபெற்றது. முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதனையடுத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட கலசங்கள் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களின் உச்சியில் பொருத்தப்பட்டது.