குழந்தைபோல் ஒருவரின் மடியில் அமர்ந்து சாப்பிடும் காக்கை; தூத்துக்குடியில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவம்
தூத்துக்குடி:ஏரல் அருகே உள்ள மாவடிபண்ணை ஊரைச் சேர்ந்தவர், ஹரிகிருஷ்ணன் (42). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு அதே ஊரில் சொந்தமாக ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். ரைஸ்மில்லில் நெல் அரிசி வகைகளை காயவைப்பது வழக்கம், இதனை அங்கு சுற்றித்திரியும் காக்கை, குருவி போன்ற நூற்றுக்கணக்கான பறவைகள் உண்டுவிட்டுச் செல்லும்.
இந்நிலையில், அதில் ஒரு காக்கை மட்டும் இவர் அருகில் வந்தாலும், அது அதன் வேலையைப் பார்த்து வந்துள்ளது. அப்போது அதன் அருகில் சென்று அந்த நபர் நெல்களை ஊட்டியுள்ளார். அப்போதும் அது அசராமல் இருந்துள்ளது. பின்னர், அவர் உணவு சாப்பிடும் போதும், குறிப்பிட்ட நேரத்தில் வந்து, அவருடன் நன்றாகப் பழகி அவர் மடியில் உட்கார்ந்து குழந்தை போல் சாப்பிட்டு வந்துள்ளது.
இது குறித்து ஹரிகிருஷ்ணனை தொலைபேசியில் அழைத்து பேசுகையில் அவர் கூறியது, "தூத்துக்குடி, ஏரல் அருகே உள்ள மாவடிபண்ணை பகுதியில் பல வருடங்களாக ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறேன். தினமும் நெல் அரிசியினை காயவைத்து, அதனை அரைத்து விற்பனை செய்து வருகிறேன். இந்நிலையில், நெல்களை காய வைக்கும்போது இதனை சாப்பிட நூற்றுக்கணக்கான காக்கைகள், குருவிகள் வரும்; அதில் ஒரு காக்கை மட்டும் என் அருகில் பயமறியாமல் வந்து செல்லும்.
அப்போது என் கையில் வைத்திருக்கும் உணவுகளை சாப்பிட அளிப்பேன். காரச்சேவு, கடலை, முறுக்கு, பிஸ்கட், முந்திரி பழம் ஆகிய உணவுகளை பயமறியாமல் வந்து என் மீது ஏறி உட்கார்ந்து சாப்பிடும். மேலும், என் அருகில் ஆட்கள் இருந்தால் இந்த காக்கை வராது, ஓடி விடும்.
இதில், ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் அதன் குஞ்சுகளையும் கூட்டி, வந்து அருகில் இருந்து, உணவு உட்கொள்ளும். இந்த நிகழ்வு வியப்பாகவும், அதே சமயம் மன நிம்மதியினையும் தருகிறது" என மகிழ்ச்சியுடன் கூறினார்.