மருத்துவமனை கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்.. அவதிக்கு உள்ளான நோயாளிகள்.. - திருவண்ணாமலை செய்திகள்
Published : Aug 22, 2023, 1:42 PM IST
திருவண்ணாமலை: செங்கம் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது. செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 கிராம ஊராட்சிகளுக்கும் தலைமை மருத்துவமனையாக இயங்கி வரும் செங்கம் அரசு பொது மருத்துவமனையில், தினந்தோறும் காலை மாலை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) காலை புற நோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறி இரத்த பரிசோதனை செய்யும் இடம் வரையில் தேங்கி நின்றுள்ளது. இதனால் நோய் தொற்றுடன் ரத்த பரிசோதனை செய்ய வரும் நோயாளிகள் கடும் துர்நாற்றம் வீசும் கழிவு நீரின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து மருத்துவருக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையினை காலை, மாலை என இரு வேலையும் மருத்துவமனையை தூய்மை படுத்தவில்லை என்றாலும் இது போல் துர்நாற்றம் வீசும் அவலநிலையை உடனடியாக தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.