மக்கள் பிரதிநிதிகள் யாரும் வராததால் ஈயாடிய அரசு விழா; தனி ஒருவனாக பங்கேற்ற அர்ச்சகர்! - dindigul district news
திண்டுக்கல்: ஆத்தூர், சித்தரேவு, மற்றும் நிலக்கோட்டை ஆகிய இடங்ளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான விழா ஆத்தூரில் நடைபெறுவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது. காலை 10:45 மணிக்கு விழா தொடங்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நண்பகல் 12.30 மணி வரையிலும் அமைச்சரும் அரசு அதிகாரிகளும் விழா நடைபெறும் இடத்திற்கு வரவில்லை.
அரசு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தது. விழாவின் முத்தாய்ப்பாக அடிக்கல் நாட்டுமிடத்தில் யாரும் இல்லாததால் அடிக்கல் நாட்டும் இடத்தில் பூஜையில் ஈடுபடும் அர்ச்சகர் மட்டுமே தனி ஒருவராக பூஜைகளை செய்து கொண்டிருந்தார். முதலமைச்சர் தொடங்கி வைத்த விழாவில் அமைச்சரும் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா: சீரமைத்து அமல்படுத்த முதலமைச்சரிடம் வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை