kamanayakkanpatti festival: காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத் திருவிழா... தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு! - Kamanayakanpatti Thiruther Bhavani
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் விண்ணேற்பு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விண்ணேற்பு பெருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விழாவின் ஒவ்வெரு நாளும் சிறப்பு திருப்பலி, நற்கருனை பவனி நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரடி திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி இன்று (ஆகஸ்ட் .15) அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. பாளை மறை மாவட்ட ஆயர் எஸ். அந்தோனிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒரு தேரில் விண்ணரசி மாதா அன்னையும், மற்றொரு தேரில் பரலோகமாதா அன்னையும் வீற்றிருக்க பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் வெள்ளத்தில் பூக்கள் தூவப்பட்டு திருத்தேர்பவனி ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் சுற்றி வந்தது.
சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் தேரில் இருந்த மாலைகள் தேசிய கொடி நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. தேர் பவனிக்கு பின்னால் நான்கு வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை நடத்தினர். மேலும் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.
திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், இந்த தேவலாயத்தில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.