சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க விரைவில் கேமரா
சென்னையில் சாலை விபத்துகளை குறைக்கவும்,போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரூ.4.22 கோடி செலவில் சாலைகளில் வேக வரம்புகளை காட்சிப்படுத்த 6 வேகக் காட்சி பலகைகளும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 45 பல்நோக்கு செய்தி பலகைகளும், 139 எல்இடி போக்குவரத்து நிழற்குடைகளும், போக்குவரத்து நெரிசலை தடுக்க 170 ரிமோட் கன்ட்ரோல் டிராபிக் சிக்னல்களும் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
இவற்றின் சேவையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மேடையில் சங்கர் ஜிவால், போக்குவரத்து சிக்னல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே மாற்ற முடியும். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் வரும் போது போக்குவரத்து காவலர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இருப்பின் மீண்டும் அவர் சிக்னலை மாற்ற அவ்விடத்திற்கு வர தாமதமாவதை தவிர்க்க ரிமோர்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாமதம் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து காவலர் இருக்குமிடத்திலிருந்தே சிக்னலை மாற்றிக்கொள்ளலாம். வேகக் கட்டுப்பாட்டு குறித்த திரை தற்பொழுது 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் எச்சரிக்கை தான், வரும் காலத்தில் கண்காணிப்பு கேமராக்களை இதனுடன் இணைத்து அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ்… அமைச்சர் நாசர் அதிரடி..