ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த திமுக உறுப்பினர்! - தரம் இல்லாத கட்டுமானங்கள்
ஈரோடுமாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் அறுபது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஈரோடு மாநகராட்சி மேயராக நாக ரத்தினம், ஆணையாளராக ஜானகி இருந்து வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 54 உறுப்பினர்களும் ஆறு அதிமுக உறுப்பினர்களும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் சாலைகள் அமைப்பது, வீட்டு மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது, ஆடவர் சுய உதவிக்குழு மூலம் பணிகள் அளிப்பது உள்ளிட்டப் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
அப்போது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு திமுக உறுப்பினர் ஆதி ஸ்ரீதர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தரமற்ற கட்டுமானம் நடைபெற்று வருவதாகவும், பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டுமானங்கள் தரம் இல்லாமல் இருப்பதாகவும் மாமன்ற அவசரக் கூட்டத்தில் பேசினார்.
இதனை மண்டலத் தலைவர் தண்டபாணி முற்றிலுமாக மறுத்ததுடன் ஊடகங்களின் முன்பாக மாநகராட்சி பொறியாளர்கள் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 8வது வார்டு உறுப்பினர் ஆதி ஸ்ரீதர் மாநகராட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததால் மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஈரோட்டில் சிஐஎஸ்எப் பெண் அதிகாரி வீட்டில் திருட்டு.. சென்னையில் திருமணம் நடந்த நிலையில் பகீர் சம்பவம்!