முதலமைச்சர் கடமையை செய்வது சிலருக்கு வயிற்றெரிச்சல்: அமைச்சர் பெரியகருப்பன் - மாற்று திறனாளிகள் நலத்துறை
சிவகங்கை: சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 12) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டருக்கான சாவியை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் “உடல் குறைபாடுகளுடன் இருந்தவர்களுக்கு முன்னதாக பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட நிலையில் அதனை ஊனமுற்றோர் என மாற்றி அழைத்தவர் கலைஞர் என்றும் அந்த பெயரையும் மேம்படுத்தி மாற்று திறனாளிகள் என பெயர்வைத்ததும் முத்தமிழறிஞர் கலைஞர்தான் என்றும் பேசினார்.”
பின்னர், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடியின் திராவிட மாடல் ஆட்சி என்கிற விமர்சனம் குறித்த கேள்விக்கு ஒரு முதலமைச்சருக்குத் திட்டங்களை அறிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும், துவக்கிவைக்கவும் உரிமை உண்டு. மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது வாரத்திற்கு மூன்று நாள் தனது சொந்த ஊருக்கு சென்றாரே அப்பொழுது சேலம் என்ன இவருக்குச் சொந்தம் என்று மாறிவிடுமா என கேள்வி எழுப்பினார்.
மேட்டூர் அணையினை வழக்கமாக முதல்வர்கள் திறப்பர் அவருக்கு வாய்ப்பு இல்லதா போது அமைச்சர்கள் திறப்பார்கள். இந்த முறை முதல்வர் தன் கடமையைச் செய்திருக்கிறார். முதல்வர் தன் கடமையைச் செய்வது எதிர்க் கட்சித் தலைவருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது எனக் கூறினார்.