சுருளி அருவியில் ஏற்பட்ட விபரீதம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! - சுருளி அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகேவுள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த அருவிக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து குளித்து மகிழ்ந்துவிட்டுச் செல்கின்றனர்.
தற்போது கோடை கால விடுமுறை தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்குச் சென்று வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரைச் சேர்ந்த நிக்ஸன் என்பவர், சுருளிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மரக்கிளை விழுந்து அவரது 15 வயது மகள் உயிரிழந்தார்.
இதனால் வனத்துறையினர் சார்பில் சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அருவி பகுதிக்குச் செல்லக்கூடிய வழிகளில் உள்ள பழைய மற்றும் காய்ந்த மரக்கிளைகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் மே 18 முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:சுற்றுலா சென்ற போது சோகம்: தலையில் மரக்கிளை விழுந்து சிறுமி உயிரிழப்பு!