தஞ்சாவூர் தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு 'பத்து தல' ப்ரீ ஷோ!
தஞ்சாவூர்:நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் பல்வேறு மாவட்டங்களில், பல திரையரங்கில் (மார்ச்30) வெளியானது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இந்த படத்தைப் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் திரையரங்குக்குள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திரையரங்க ஊழியருக்கும், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வந்திருந்த நிலையில், பல திரையுலக பிரபலங்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களைத் திரையரங்குக்குள் அனுமதிக்காததற்கு ‘பத்து தல’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள படம் என்பதால் சிறுவர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது எனக் கூறி நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 15 பேரையும் மீண்டும் திரையரங்குக்குள் படம் பார்க்க அனுமதித்ததாக ரோகிணி திரையரங்கு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த காவேரி என்ற பெண் அளித்த புகாரின் பேரில், ரோகிணி திரையரங்கின் காசாளி ராமலிங்கம் மற்றும் பணியாளர் குமரேசன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டாலும், முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் கலைகள் அனைவருக்கும் சொந்தமானது எனவும் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் திரையரங்கத்தில் 35 நரிக்குறவர் மக்களை முதல் வகுப்பு இருக்கையில் அமர வைத்து ‘பத்து தல’ படம் பார்க்க வைத்த தனியார் அமைப்பான ஜோதி அறக்கட்டளையின் செயல், நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சென்னை ரோகிணி திரையரங்கு சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது - நடிகர் விஜய் சேதுபதி