ஆட்டம் பாட்டத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய தஞ்சை கல்லூரி மாணவர்கள்..!
Published : Jan 4, 2024, 10:45 PM IST
தஞ்சாவூர்:தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இன்று (ஜன. 4) பொங்கல் விழாவினை கொண்டாடினர்.
இக்கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதைப்போல் இந்தாண்டும் தென்னங் கீற்றால் பின்னப்பட்ட குடிசை வீட்டை மாணவ, மாணவிகள் அமைத்து அதில் தென்னை ஓலைகள், மாவிலை தோரணம் கட்டி, பெண்கள் வண்ண கோலமிட்டு, கரும்பால் தோரணம் கட்டி, ஒரு கிராமத்தையே கல்லூரி வளாகத்தில் அமைத்து கல்லூரி மாணவிகள் சேலை அணிந்தும், மாணவர்கள் வேஷ்டி. சட்டை அணிந்தும் மேள, தாளங்கள் முழங்கப் பொங்கல் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர்.
இதுகுறித்து கல்லூரி மாணவி ரம்யா கூறுகையில், இந்த சமத்துவ பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகவும், எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து சந்தோசமாகக் கொண்டாடுவதாகவும், இப்போது உள்ள தலைமுறையினர் கேஸ் அடுப்பு வைத்து அதில் பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றனர், நாங்கள் பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பு வைத்து அதில் மண்பானை வைத்துப் பொங்கல் சமைத்துக் கொண்டாடி வருகிறோம் என்று கூறினார்.