Video - டிராக்டரை முந்தி செல்ல முயற்சித்த பேருந்தால் விபத்து: பரபரப்பு காட்சிகள் - டிராக்டர் விபத்து
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த பேருந்தால் ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேல உளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், இவர் தஞ்சை, பட்டுக்கோட்டை சாலையில் உளூர் அருகே நேற்று மாலை (ஜூலை 24 ) டிராக்டர் ஓட்டியவாறு சென்றுள்ளார்.
அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பேருந்து ஒன்று அசோக்குமார் ஓட்டிச்சென்ற டிராக்டரை முந்திச்செல்ல முயற்சித்துள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து டிராக்டரின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டிராக்டர், சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சி எதிர்த்திசையில் வந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் அசோக்குமார் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவிரி நீா் தமிழக எல்லை வந்தடைந்தது: விநாடிக்கு 2500 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு!