வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன கொடியேற்றம்! - வடலூர் வள்ளலார் கோயில்
கடலூர்: வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி இன்று காலை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடந்தது, தொடர்ந்து காலை 7:30 மணியளவில் தர்மசாலையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. இதேபோல் மருதூரில் உள்ள வள்ளலார் சந்நிதியிலும், கருங்குழியில் உள்ள வள்ளலார் சந்நிதியிலும் கொடியேற்றம் நடந்து. அதனை தொடர்ந்து வடலுார் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடந்தது.
வள்ளலாருக்கு சத்திய ஞானசபை கட்ட நிலத்தை தானமாக அளித்த பார்வதிபுரம் கிராம மக்கள் வரிசை தட்டுடன் மேளதாளம் முழங்க வந்தனர். பின்னர் அக்கிராம பெரியவர்கள் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் அமைந்துள்ள கொடி மரத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. நாளை (5ம் தேதி ) தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி சத்திய ஞான சபையில் காலை 6:00 மற்றும் 10:00 மணி, பகல் 1:00 மணி, இரவு 7:00 மற்றும் 10:00 மணி, 6ம் தேதி காலை 6 மணி என 6 காலம் 7 திறைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதேபோல, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 7-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. இதனிடையே வடலூர் தைப்பூச திருவிழா ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் மது மற்றும் மாமிசக் கடைகளை நாளை முழுவதுமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.