நடிகர் சுனில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம்! - Actor Sunil tharisanam
Published : Jan 6, 2024, 2:29 PM IST
தேனி: கேரள மாநிலம் சபரிமலையில், மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து, விரதம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நிறைவு பெற்று நடை மூடப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 29ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்பட்டது.
ஜனவரி 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்குப் பின்னர், கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவுபெற உள்ளது.
இந்நிலையில், சினிமாப் பிரபலங்கள் பலர் சபரிமலை ஐயப்பனை தரிசித்து வரும் நிலையில், நேற்று (ஜன.5) தெலுங்கு திரையுலக முன்னணி நகைச்சுவை நடிகர் சுனில் மாலை அணிவித்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமடைந்த நடிகர் சுனில், மார்க் ஆண்டனி, ஜப்பான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.