தஞ்சை திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சாமி தரிசனம்! - ராகு பெயர்ச்சி
Published : Oct 31, 2023, 7:12 AM IST
தஞ்சாவூர்:நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்குவது கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் உடனுறை நாகநாத சாமி கோயில். இங்கு ராகு பகவான் நிருதி மூலையில் தனது இரு மனைவியரான நாகவல்லி, நாகக்கன்னி ஆகியோருடன் நிலை கொண்டு, வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இவருக்கு ராகு கால நேரத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் ராகு தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது. நிழல் கிரகமான ராகு பகவான் பின்னோக்கி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக, ஒன்னரை ஆண்டுகள் (18 மாதங்கள்) எடுத்து கொள்வார்.
அந்த வகையில் மேஷ ராசியில் இருந்த ராகு பகவான், திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்று (அக். 30) மீன ராசிக்கு பெயர்ச்சியானார். இப்பெயர்ச்சியினையொட்டி மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, பிரபல தெலுங்கு நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பாலாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.