‘அண்ணனுக்கு எவ்ளோ பெரிய மனசு’.. தக்காளி தானம் கொடுத்தவரின் வீடியோ வைரல்! - தக்காளி விலை
தமிழ்நாட்டில் சமையல் அறையில் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டிய பொருளாக தக்காளி மாறிவிட்டது. அந்த அளவுக்கு தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. கிலோ ரூபாய் 100-இல் இருந்து 130 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பெரும் கவலையில் உள்ள நிலையில், தற்போது ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. முன்னதாக, இனி மெக்டானல்ஸ் உணவகத்தில் தக்காளி பயன்பாட்டில் இருந்து தற்காலிகமாக பயன்படுத்தப்போவது இல்லை என தெரிவித்தது.
இந்த நிலையில், வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர், ‘தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி வேண்டும், கொஞ்சம் கொடுங்கள்’ எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து லாரியில் இருந்த நபர் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரிடம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசி உள்ளார். அந்த தக்காளியை இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் பத்திரமாக கேட்ச் பிடித்து வைத்துக் கொண்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.