பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா... கேள்வி கேட்ட நபரை ஆபாச வார்த்தையால் திட்டிய ஊழியர்! - தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள கடை எண் 1927 கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் மது பாட்டில் வாங்குகிறார். அதற்கு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்பனையாளர் சோமு என்பவர் கேட்டுள்ளார். இதை தட்டிக் கேட்ட வாடிக்கையாளரை, விற்பனையாளர் சோமு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு உத்தரவை மீறி அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாகவும், அதை தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய டாஸ்மாக் விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், திருப்பூர் மாநகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஆய்வு செய்து சரியான விலைக்கு மது விற்பனையை உறுதி செய்ய வேண்டும் என்பதும் மதுப்பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.