"மலேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தி தமிழர்கள்" - மலேசிய தமிழ் சங்கம்! - பூம்புகார் கலைக்கூடம்
மயிலாடுதுறை: மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரியமிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.
அப்போது பேசிய மலேசிய தமிழ்ச் சங்க நிர்வாகிகள், "சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம், சட்ட நாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக" தெரிவித்தனர்.
மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர் எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது என்றார். மேலும் அதற்கான சூழ்நிலை இன்னும் நூறு ஆண்டு காலத்திற்கு இல்லை எனவும், இனிவரும் காலங்களிலும் மலேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்தனர்.
மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாசாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகின்றோம். இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்து உள்ளனர் என்றனர்.
ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை. அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் எடுக்கப்படும் தமிழ் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் மலேசிய தமிழர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக தமிழ் பண்பாடு கலாசாரம் மிகவும் மேம்படும். இதுவே தங்களது விருப்பம் என்று தெரிவித்தனர்.
இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாலத்தீவு வரும் இந்திய தோணிகளுக்கு கட்டணச் சலுகை - மாலத்தீவு துறைமுக CEO!