ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப்: உத்திரமேரூர் அரசு மருத்துவமனை அவலம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே வசிக்கும் பள்ளி மாணவன் ஒருவனுக்குக் கடந்த இரண்டு நாட்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மாணவனின் தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கே மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுக் குழல் வழியாக ஆக்சிஜன் செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி உள்ளனர். மாணவனின் மூச்சுக் குழல் வழியாக ஆக்சிஜன் செலுத்துவதற்குண்டான மாஸ்க் மருத்துவமனையில் கையிருப்பில் இல்லாத காரணத்தால் டீ கடையில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கப்புகளை வாங்கி வந்து அதன் உதவியுடன் ஆக்சிஜனை மாணவனின் மூக்கு வழியாகச் செலுத்தியுள்ளனர்.
இப்படி வித்தியாசமாக ஆக்சிஜன் செலுத்தும் காட்சி வெளியாகி அங்கு உள்ளவர்களைப் பதைபதைப்பில் ஆழ்த்தியது. அரசு மருத்துவமனைக்குச் சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் அதிக அளவில் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் அங்கே முறையான சிகிச்சை அளிப்பதற்கு ஒரு சிறிய அளவிலான மருத்துவ உபகரணம் கூட இல்லாத சூழல் நிலவதாக பலரும் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.