Exclusive: வடமாநில தொழிலாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் வருகை குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் விவாதம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஓடும் ரயிலில் வட மாநில தொழிலாளிகளை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் உடனடியாக வடமாநில தொழிலாளியை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து காவல் துறை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்தது.
சமூக வலைதளங்களில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. அந்த வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.
வட இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் நேராது. தமிழ்நாட்டு காவல் துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீகார் மாநிலத்தவர்கள் தாங்கள் நன்றாக இருப்பதாக தங்களது குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அங்குள்ள குடும்பத்தார் வேதனையில் இருப்பார்கள். யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக வதந்தை பரவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
இதையும் படிங்க:‘வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ - சென்னை தெற்கு கூடுதல் ஆணையர்