திருநங்கையை வைத்து திரிஷ்டி கழித்த போக்குவரத்து போலீசார் - திருநங்கையை வைத்து திரிஷ்டி கழித்த போலீசார்
சென்னையை அடுத்த மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, நேற்று (ஜூன் 8) ஒரே நாளில் மட்டும் இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர்.
இதனையடுத்து, இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனைத் தடுக்க போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய முயற்சியாக போக்குவரத்து காவல் துறையினர், தங்களது வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக் கொண்டு அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படும் பகுதியான வானகரத்தில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் சுற்றி திருஷ்டி சுத்தி போடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக திருநங்கை ஒருவரை போக்குவரத்து காவல் துறையினர், போலீஸ் வாகனத்திலேயே ஏற்றிச் சென்று எங்கெல்லாம் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழத்தை சுத்தி போடும் நிகழ்வை செய்தனர்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் போலீசாரே சாலையின் ஓரத்தில் பூசணிக்காய் உடைத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.