பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி... விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்! - palani murugan temple thiruvizha
Published : Nov 19, 2023, 8:06 AM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படுவது, பழனி முருகன் கோயில். இக்கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெறக் கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மேலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யக் கூடிய நிகழ்ச்சி, மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நடைபெற்றது. முன்னதாக மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கிக் கொண்டு, நவ வீரர்கள் முன்னே அணிவகுத்து வர மலையடிவாரத்திற்கு வந்து, சூரபத்மன்களை வதம் செய்தார்.
முதலில் வடக்கு கிரி வீதியில் தாரகாசூரனையும், அடுத்ததாக கிழக்கு வீதியில் பானுகோபன் சூரனையும் சின்னகுமரர் வதம் செய்வார். பின்னர், தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும் இறுதியாக மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரனை வதம் செய்யக்கூடிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பினர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. மேலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.