தஞ்சை சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்... 28 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய கோயில்! - இன்றைய தஞ்சாவூர் செய்திகள்
Published : Nov 1, 2023, 12:53 PM IST
தஞ்சாவூர்:கும்பகோணத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த விநாயகர் ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவது சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில். தற்போது அங்குள்ள ஐயப்பன் மற்றும் துர்க்கையம்மன் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று, சமீபத்தில் முடிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடப்பதால் நேற்று (அக்.30) முதல் கால யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இன்று 4ஆம் கால யாக பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியும், அதனையடுத்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் நாதஸ்வரம் மற்றும் மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை உற்சவர் சுந்தரமூர்த்தி விநாயகர் விசேஷ மலர் அலங்காரத்தில் திருவீதியுலா வந்தார். ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் விழ நடைபெறுவதால், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.