Ooty Fruit Show: கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சி.. குன்னூரில் பழக்கண்காட்சி பரிசளிப்புடன் நிறைவு! - சுற்றுலா பயணிகள்
நீலகிரி: கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக இம்மாதம் 6-ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியைத் தொடர்ந்து உதகையில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி என அடுத்தடுத்து கோடை விழாக்கள் பல நடைபெற்று வந்தது. இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டிற்கான இறுதி கோடை விழா நிகழ்ச்சி நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
இந்தாண்டு பழகண்காட்சியின் சிறப்பம்சமாக 1.2 டன் அன்னாசிப் பழங்களைக் கொண்டு 15 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அன்னாசிப் பழம் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இதேபோல் 3650 கிலோ திராட்சை, மாதுளம், ஆரஞ்சு போன்ற பழங்களைக் கொண்டு மலபார் அணில், பழக்கூடை, பழ பிரமிடு, மண்புழு, ஊட்டி 200 லோகா போன்றவை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இந்த பழக்கண்காட்சியை தமிழ்நாடு மட்டுமில்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். இந்த பழக்கண்காட்சியில் நீலகிரி மட்டுமில்லாது தமிழ்நாட்டின் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்த தோட்டக்கலைத் துறையினர் தங்கள் மாவட்டத்தில் விளையும் பழங்களைக் காட்சிப் படுத்தியிருந்தனர்.
இதில் தனியார் தோட்டங்கள், சிறு பழ வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். பல்வேறு பழ வகைகளைக் கண்காட்சியில் இடம் பெறச் செய்த 7 நபர்களுக்கு ரோலிங்க் கப், 22 பேருக்கு முதல் பரிசு, 3 பேருக்கு 2-வது பரிசு, 84 பேருக்குச் சிறப்புப் பரிசுகள் என மொத்தம் 116 பரிசுகள் தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டனர்.