மயிலாடுதுறையில் கோடை விழா தொடக்கம்.. 16 மாநிலங்களைச் சேர்ந்த 270 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு
இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய 2023ஆம் ஆண்டுக்கான கோடை விழா கலைநிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நாளை (ஜூன் 25) வரை 3 நாள் நடைபெறும் கலை நிகழ்ச்சியை தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய அதிகாரி நாதன் மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கோடை விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த 3 நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களைச் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
முதல்நாள் நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநிலத்தின் பில் பழங்குடியின பெண்கள் கூடி ஆடும் கூமர் என்ற நாட்டுப்புற நடனம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தென்கிழக்கு பிராந்தியத்தின் சரைகேலா மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டங்களின் முகமூடி நடனமான சாவ் நடனம் ஆகியவர் அரங்கேற்றப்பட்டது.
மேலும், ஆந்திர மாநிலத்தின் மழை தெய்வமான கங்கம்மாவை மகிழ்விப்பதற்காக தெய்வத்தைப் போற்றும் வகையில், அனைத்து கிராம திருவிழாக்களிலும் ஆடப்படும் தப்பேட்டா குல்லு நடனம், தெலங்கானா மாநிலத்தின் ஓக்கு டோலு நடனம், தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனமான கரகம், காவடி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நடனத்தை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.