திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என ரிட்டன் ஆன சுள்ளி கொம்பன்... அலர்ட் ஆன வனத்துறையினர்! - ஆழியார் காவல் நிலையம்
Published : Dec 21, 2023, 6:47 PM IST
கோயம்புத்தூர்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வனச்சரகம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த சுள்ளி கொம்பன் யானை, மலைவாழ் மக்கள் குடியிருப்புகள், ஆழியார் அறிவு கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மற்றும் மாலை நேரங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. அவ்வப்போது போக்குவரத்திற்கு இடையூறாகவும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியும் வந்தது.
மேலும் ஊருக்குள் வலம் வரும் போது சில நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி வந்தது. நவமலை மின்சார ஊழியர் ஓட்டி வந்த காரை தந்தத்தால் தூக்கி வீசி அட்டகாசம் செய்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மின்சார ஊழியர் உயிர் தப்பினார், மேலும் நவமலை சென்ற அரசு பேருந்தை துரத்தி கண்ணாடியை உடைத்தது. சின்னார் பகுதியில் மலைவாழ் மக்கள் வீட்டையும் சேதப்படுத்தியது.
இப்படியாக பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்த சுள்ளிக் கொம்பன் நான்கு மாதங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ஆழியாரை நோக்கி நரிக்கல்பதி வழியாக வலம் வருகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கு முன்பு சுள்ளி கொம்பன் மூன்று கார்கள் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.