சிலம்பத்தில் புதிய உலக சாதனை நிகழ்த்திய திருச்சி மாணவர்கள்! - Kids World Record Book
திருச்சி:இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சியில் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில் 3 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி பல்வேறு கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்திய பள்ளி மாணவி சுகித்தா மற்றும் 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒன்றிணைந்து ‘பாரம்பரியம் காப்போம்’ என்ற உறுதிமொழியுடன் இரட்டை சிலம்பம் சுற்றி இன்றைய தினம் உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
இந்த உலக சாதனையானது துபாயைச் சேர்ந்த ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகம், கனடாவைச் சேர்ந்த கிட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் உலக சாதனை புத்தக பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்ச்சியில், ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பத்தைச் சுற்றி வீரர், வீராங்கனைகள் உலக சாதனை நிகழ்த்தினர்.
மேலும், இது குறித்து துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தக இயக்குநர் மோனிகா ரோஷினி கூறியதாவது, “மேலை நாடுகளில் இது போன்று சிலம்பத்தில் ஆர்வம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் திருவிழாக்களின்போது மட்டுமே சிலம்பம் சுற்றுவதை காண முடிகிறது. இந்த நிலை வரும் காலங்களில் மாற்றப்பட வேண்டும். அனைவரும் சிலம்பம் கற்று சிலம்பம் சுற்ற முன் வர வேண்டும்” என்றார்.