நீட் வினாத்தாள் எப்படி இருந்தது..? சென்னை மாணவர்கள் கருத்து! - Neet Result date
சென்னை :எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவில் நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழ்நாட்டில் 31 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னையில் 22 மையங்களில் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்கள் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், விலங்கியல் பாடம் எளிதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசால் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெற்று இருந்ததாகவும் தெரிவித்தனர். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் சற்று சிந்தித்து எழுதும் வகையிலும் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் கூறினர். கேள்வித் தாள் நடுநிலைமையுடன் இருந்ததால் தேர்வு எழுத எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர்.