85 விநாடிகளில் 125 கணித கேள்விகளுக்கு பதில்.. பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்!
தஞ்சாவூர்: தேசிய அளவில் 200 கேள்விகளுக்கு 7 நிமிடத்தில் விடையளிக்கும் மின்னல் வேகக் கணிதப் போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாகப் பங்கேற்றனர். 5 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு, மின்னல் வேகத்தில், கணித கேள்விகளுக்கு விடையளிக்க ஜி மேக்ஸ் என்ற தனியார் நிறுவனம் பயிற்சியளிக்கிறது.
இந்நிலையில், மின்னல் வேகக் கணித பயிற்சி பெற்ற 9ம் வகுப்பு பயிலும் நித்யஸ்ரீ (14), 3ஆம் வகுப்பு பயிலும் சங்கரா (8), மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் ரகுபதி (12) ஆகிய மூவர் உலக சாதனை படைக்கும் வகையில், 125 கணித கேள்விகளுக்கு 100 வினாடிகளில் விடையளிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இவர்கள் இந்த 125 கேள்விகளுக்கும், மூவருமே 85 வினாடிகளிலேயே விடையளித்து பழைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்கள் மூவருக்கும் சுழல் கோப்பையுடன் பதக்கமும், சான்றிதழ்களையும் பயிற்சி மைய நிர்வாகி பழனி மாணிக்கம் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 5 வயது முதல் 14 வயது வரையிலான 1,200 மாணவ மாணவியர்கள் 7 நிமிடங்களில் 200 கேள்விகளுக்குப் பதிலளித்து சாதனை படைத்தனர். மணிச்சட்டங்களைப் பயன்படுத்தி, மின்னல் வேகத்தில் விடையளிக்கும், தேசிய அளவிலான போட்டியில் 6 வயது வரை, 8 வயது வரை, 10 வயது வரை, 12 வயது வரை, 14 வயது வரை உள்ள மாணவர்கள் 5 பிரிவுகளாக 8 நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆர்வமாகப் பங்கேற்று அசத்தினர்.
இதையும் படிங்க: திருபுவனம் தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரசுவாமி கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம்