நாகையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு - ஈடிவி பாரத் செய்தி
Published : Jan 8, 2024, 9:41 AM IST
நாகப்பட்டினம்:தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான 'சிலம்பம்' கலையை வளர்த்தெடுக்கவும், அந்த கலையினை அடுத்த தலைமுறை அறிந்து கொள்வதற்கும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ஒரு சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சிகளும் அளிக்கப்பட்டும் வருகின்றன.
இதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தனியார் கல்லூரியில் 'உலக சிலம்பம் விளையாட்டு சங்கம்' மற்றும் வீரத்தமிழன் சிலம்பம் கலைக்கூடம் இணைந்து நடத்திய 'மாநில அளவிலான சிலம்ப போட்டி' நேற்று (ஜன.7) நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் இப்போட்டிக்கான தகுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் இப்போட்டி 5 - 6, 7 - 8 மற்றும் 9 - 10 வயது என மூன்று பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்புடன் நடந்த இப்போட்டியில் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தனித்திறன் மற்றும் தொடுமுறை உள்ளிட்ட போட்டிகள் நடுவர் மேற்பார்வையில் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, "வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்காமல், இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கு பெறும்போது, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும் இது போன்ற தற்காப்பு கலையினால் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருக்கின்றோம்" எனத் தெரிவித்தனர்.