ஆஷாட நவராத்திரி: புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா
தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டு வந்தன. அதேபோல் விழாவின் நிறைவு நாளான நேற்று (ஜுன் 28) ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு, பூச்சொரிதல் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் தேரோடும் ராஜ வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் கேரளாவின் பாரம்பரிய தெய்யம் நடனம், சிவன், நரசிம்மர், காளி, அனுமன் போன்ற வேடங்களில் நடனமும், செண்டை மேளம், நாதஸ்வரம், மங்கல வாத்தியமும் இசைக்க குதிரையாட்டம் மற்றும் கோலாட்டம் ஆகியவற்றுடன் வான வேடிக்கையுடன் வெகு விமரிசையாக சுவாமி வீதி உலா நடைபெற்றது.