கிருஷ்ண ஜெயந்தி விழா... தங்க கருட வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர்கள் தரிசனம்!
Published : Sep 3, 2023, 9:23 AM IST
|Updated : Sep 3, 2023, 10:04 AM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பழமையான ருக்மணி ஸத்யபாமா சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், தஞ்சை நாயக்கர் மன்னர்கள் ஆட்சி காலத்திலும் செப்பு சிலா சாசனப்படி ஆதிக்கம் பெற்ற பெருமை கொண்ட வைணவ ஸ்தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கும்பகோணம் ருக்மணி ஸ்த்யபாமா சமேத நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயிலில், 51ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயந்தி மகா உற்சவத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 30ஆம் தேதி புதன்கிழமை நவகலச திருமஞ்சனத்துடன் தொடங்கி இந்திர விமானம், சந்திர பிரபை, சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் 4ஆம் நாளான நேற்று (செப். 3) உற்சவர் ஸ்ரீ கிருஷ்ணர், தங்க கருட வாகனத்தில் விசேஷ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமி தரிசனம் செய்தனர். பிரபந்தார்கள் பாசுரங்கள் பாட, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, நட்சத்திர ஆரத்தியும் 16 விதமான சோடச உபசாரங்களும் நடத்தப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சுவாமிகளுக்கு சாடாரி சாற்றி, தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுவாமி திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஜெயந்தி விழாவில், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், கைத்தல சேவை, சூர்ணாபிஷேகம், குதிரை வாகனம், என நாள்தோறும் திருவீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 6ஆம் தேதி புதன்கிழமை காலை வெண்ணைதாழி உற்சவமும், 7ஆம் தேதி வியாழக்கிழமை மாலை திருத்தேரும், 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு உறியடி உற்சவமும் நடைபெற உள்ளது. 9ஆம் தேதி சனிக்கிழமை இரவு விடையாற்றி உற்சவத்துடன் 51ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவடைகிறது.