மதுபாட்டிலின் உள்ளே எட்டுக்கால் பூச்சி...மதுப்பிரியர் அதிர்ச்சி - liquor bottle
சென்னை: சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பூவிருந்தவல்லி, குமணன்சாவடி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் 1848 என்ற விஸ்கி மது பாட்டில் வாங்கினார். வீட்டிற்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்க்கும் பொழுது பாட்டில் உள்ளே மதுவில் இறந்து போன எட்டுக்கால் பூச்சி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழக அரசு, அனைத்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், சரியான முறையில் மது பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும், மதுபாட்டில்களில் ஆங்காங்கே சில நேரங்களில் கரப்பான் பூச்சி, பல்லி, தவளை போன்றவை இறந்து கிடப்பதாக ஏற்கனவே பல செய்திகள் வந்த நிலையில், தற்போது சென்னை பூவிருந்தவல்லி மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் எட்டுக்கால் பூச்சி இறந்து போன நிலையில் இருந்தது மதுபிரியர்கள் இடையே மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.