வேலூரில் களைகட்டிய ஆடிக்கிருத்திகை; முருகனுக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு!
வேலூர்: ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் ஆடிக்கிருத்திகை திருநாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள மலை மீது மிகவும் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் வள்ளி, தேவசேனா காட்சியளிக்க திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதனையடுத்து மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதேபோன்று வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன், வள்ளி தெய்வானைக்கு தங்கக்கவசம் அணிவித்து தீபாராதனைகளும் நடைபெற்றது.
காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆடிக்கிருத்திகையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, சந்தனக் காவடி, மயில் காவடி எடுத்து வந்த முருகரை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அதேபோன்று இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கூட்டம் கூட்டமாக வந்து, காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.
ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.