புத்தாண்டு 2024: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்..! பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு..!
Published : Jan 1, 2024, 2:36 PM IST
தஞ்சாவூர்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் 2024 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டினை பங்குத் தந்தைகள் சாம்சன், மற்றும் ரூபன் அந்தோனிராஜ், ஆகியோர் மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டினை தெரிவித்தனர். சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், மாதாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர்.