தேய்பிறை அஷ்டமி; தருமபுரி தட்சிணகாசி காலபைரவர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு - Special worship at Dharmapuri Dakshina Kas
தருமபுரி:தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் தட்சிணகாசி காலபைரவர் ஆலயம் (Dharmapuri Dhakshinakasi Kalabairavar Temple) அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 11) ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி என்பதால் இங்கு காலபைரவருக்கு பால், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காலபைரவர் தங்ககவச அலங்காரத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழவகைகளால் ஆன மாலைகள் மற்றும் பூமாலைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்தோடு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தருமபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் 3 மணிநேர வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தா்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சை பழங்களில் தீபம் ஏற்றி வழிபட்டனா். தருமபுரி காலபைரவர் ஆலயத்தில் புதிதாக 27 ராசிகளுக்குமான மூலிகை செடிகளை கோயில் வளாகத்தின் நுழைவு வாயிலில் பரிகார மூலிகைகள் அமைக்கப்பட்ட நிலையில், மூலிகைகளை பக்தர்கள் வணங்கி சென்றனர்.