Video: சிறப்புப் பூஜையால் களைகட்டிய வண்டி கருப்பணசாமி கோயில்; பரவசத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள் - திண்டுக்கல் மாவட்ட செய்தி
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் தென் மாவட்ட எல்லையாக உள்ளது. இந்த மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளும் அய்யலூரில் உள்ள காவல் தெய்வமான வண்டி கருப்பணசாமி கோயில் முன்பு, வாகனங்களை நிறுத்தி பூஜை செய்துவிட்டு ஊருக்குள் செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் வாகன ஓட்டிகள் மற்றும் தொழில் செய்வோர் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் வந்து கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி, சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று தமிழ்ப் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக 14வது ஆண்டு வருடாந்திர பூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞர்கள் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து கருப்பணசாமி, அய்யனார், பத்திரகாளியம்மன், மாரியம்மன், நீலி அம்மன், ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து நாடக கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
அதனைத் தொடர்ந்து கட்டைக்கால் ஆட்டம், நாசிக் டோல், பாரம்பரிய பறையாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. சிறுவர்கள் கட்டைகால் ஆட்டம் மற்றும் பறையாட்டம் ஆடியதும், கூட்டத்தில் ஊர்வலமாக வந்த நடனக்கலை பெண்கள், புடவையை தூக்கியபடி குத்தாட்டம் போட்டபடி வந்ததும் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: Fishing festival:கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - ஏமாற்றத்துடன் வீடுதிரும்பிய மக்கள்!