சோத்துப்பாக்கம் அஞ்சூரம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - latest news
Published : Nov 19, 2023, 2:06 PM IST
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளமேல்மருவத்தூர் புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலமாக விளங்குகிறது. அதன் சுற்றுவட்டாரத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், பெரும்பேர்கண்டிகை எல்லம்மன் கோயில், சுப்ரமணிய சுவாமி கோயில், மரகத தண்டாயுதபாணி கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. அந்த வகையில், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், சோத்துப்பாக்கத்தில் கிராம தேவதையாக விளங்கக்கூடிய அஞ்சூரம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில், இன்று (நவ.19) மகாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, வேத கோஷங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. நாதஸ்வரம் மற்றும் மேள தாள, மங்கல வாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு வாத்தியங்கள் இசைக்க, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேல்மருவத்தூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதையும் படிங்க:கந்த சஷ்டி விழா; சுவாமிமலையில் சூரனை வதம் செய்த சுவாமிநாதசுவாமி!