கந்த சஷ்டி; வேலூர் முருகன் கோயில்களில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!
Published : Nov 19, 2023, 8:06 AM IST
வேலூர்:வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த நவம்பர் 13ஆம் தேதி முதல் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை கந்த சஷ்டி சஹஸ்ரநாம அர்ச்சனை, கந்த புராண பாராயணம் ஆகியவை நடைபெற்று வந்தன.
தொடர்ந்து, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், தங்கக் கவச அலங்காரமும் நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியைக் காண கோட்டை மைதானத்தில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இதேபோல், அரியூர் திருமலைக்கோடியில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில், காங்கேயநல்லூர் முருகன் கோயில்களில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தோட்டப்பாளையம் தாரகஸ்வரர் கோயில், வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோயில், தார்வழி மயிலாடும் தணிகை மலை முருகன் கோயில், மகா தேவமலை கோயில், சாத்து மதுரை முருகன் கோயில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள், அபிஷேக அலங்காரம், சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.