டெல்லி நாடாளுமன்ற திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய சோனியா மற்றும் ராகுல்! - சோனியா காந்தி
டெல்லி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் உள்ள அவரது புகைப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்நிகழ்வின்போது, கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதி மணி, சென்னை வடக்குத் தொகுதி திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, திமுக எம்.பி. திருச்சி சிவா, வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் திமுகவினர் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அக்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை வரை நடந்த அமைதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.