கொடைக்கானலில் குப்பைகளால் உருவாக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி! - Raised awareness NGO
திண்டுக்கல்:மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத் தலமாகும். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களும் கொடைக்கானலைச் சுற்றி உள்ள இடங்களும் முழுமையாக வனப்பகுதியை கொண்டுள்ளதாகவே இருக்கிறது.
பல்வேறு சோலைக்காடுகளும் இங்கு பாதுகாக்கக் கூடியதாக இருந்து வருகிறது. குறிப்பாக நகர காட்சி முனை பகுதி, பாம்பே சோலை, மதிகெட்டான் சோலை, லோவர் சோலை உள்ளிட்டப் பல்வேறு சோலைப் பகுதிகள் இங்கு உள்ளன. இது போன்ற சோலை காடுகளில் சோலை மரங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகளும் வாழ்ந்து வருகிறது.
கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலா தலம் என்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.
தற்போது சில காலங்களாகவே குப்பைகள் வனப்பகுதியில் வீசப்படுவதால் வனம் மற்றும் வனத்தைச் சார்ந்துள்ள வன விலங்குகளும் அழிந்து வரக்கூடியதைப் பார்க்க முடிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கொடைக்கானலில் உள்ள தன்னார்வ அமைப்பான ‘சோலை குருவி’ என்ற அமைப்பு கடந்த மூன்று வருடங்களாக வனப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி வருகிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் நகர காட்சி முனைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் டன் கணக்கிலான குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், அகற்றப்பட்ட குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக், காகிதம், பாட்டில்கள் உள்ளிட்டப் பல்வேறு குப்பைகளை வைத்து வண்ணத்துப்பூச்சி போன்ற தத்ரூப உருவத்தை உருவாக்கினர்.
இதன் மூலமாக வனப்பகுதியில் குப்பைகளை வீசக்கூடாது என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையின் அனுமதி பெற்று சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.